விஜய் நடித்த படங்களுக்கு சர்ச்சைகள் மற்றும் தடைகள் ஏற்படுவது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், ரசிகர்களுக்கு கடந்த கால நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளன. விஜயின் திரைப்பயணத்தில் எந்தெந்த படங்கள் எந்தெந்த சிக்கல்களை சந்தித்தன என்பதை பார்ப்போம்.
புதிய கீதை
2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை’ படத்திலிருந்தே விஜய் படங்களுக்கான சர்ச்சைகள் தொடங்கின. முதலில் இந்தப் படத்திற்கு ‘கீதை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விஜய் நடித்த படத்திற்கு ‘கீதை’ என்ற பெயர் பொருத்தமற்றது என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து படத்தின் பெயர் ‘புதிய கீதை’ என மாற்றப்பட்டு வெளியானது.
காவலன்
விஜயின் 50வது படமான ‘சுறா’ பெரும் தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘காவலன்’ படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டது. ‘சுறா’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு கேட்டு விநியோகஸ்தர் வழக்கு தொடர்ந்தார். சில திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை வெளியிட மறுத்தனர். விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை மூலம் நஷ்டஈடு வழங்கப்பட்ட பிறகே ‘காவலன்’ படம் வெளியானது.
துப்பாக்கி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ விஜயின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ஆனால் இந்தப் படமும் சர்ச்சைகளில் சிக்கியது. ‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழுவினர் தலைப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீர்க்கப்பட்டு படம் வெளியானது.
தலைவா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தலைவா’ படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘Time to Lead’ என்ற டேக் லைன் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளுக்கு மிரட்டல் வந்ததாக செய்திகள் வெளியானது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை. விஜய் வெளியிட்ட வீடியோ பேசுபொருளானது. இறுதியில் ‘Time to Lead’ வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியானது.
கத்தி
‘துப்பாக்கி’க்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்துக்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இலங்கை அரசுக்கு ஆதரவான லைகா நிறுவனம் தயாரித்த படம் என்பதால் பல அமைப்புகள் தடையை கோரின.
புலி
‘புலி’ படம் வெளியாகும் முன், விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. பல இடங்களில் முதல் காட்சி திரையிடப்படவில்லை.
மெர்சல்
2017ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹெச்.ராஜா விஜயின் பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். கர்நாடகாவில் சில அமைப்புகள் திரையரங்குகளில் வன்முறையில் ஈடுபட்டதால் படத்திற்கு தடையிட கோரிக்கை எழுந்தது. பல தடைகளுக்கு பிறகே இப்படம் வெளியானது.
சர்கார்
ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மூன்றாவது முறையாக இணைந்த ‘சர்கார்’ படமும் சர்ச்சைகளில் சிக்கியது. படம் வெளியான பிறகு அரசு இலவச திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் பாகிஸ்தானியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி கத்தார், குவைத் நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் லீக்கும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது தடியடி, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது விஜயை வருமான வரித்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றது, அதன் பின்னர் ‘Thank You Neyveli’ என விஜய் வெளியிட்ட ட்வீட் போன்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தின.
இவ்வாறு, விஜயின் பல படங்கள் காலகாலமாக அரசியல், சமூக மற்றும் சட்ட சிக்கல்களில் சிக்கியிருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார்.
