நம் நாட்டில் பலருக்கும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. குறிப்பாக, சிகரெட் புகைப்பது போன்ற பழக்கங்களுக்கு ஏராளமானவர்கள் அடிமையாகி உள்ளனர். கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு வயதினரும் இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர். புகைப்பிடிப்பு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பது தெரிந்திருந்தாலும், பலர் அதை கைவிட முடியாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிகரெட் உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மத்திய நிதித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா முதலில் லோக்சபாவிலும், பின்னர் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் புகையிலைப் பொருட்கள் மீதான வரியை அதிகரிப்பதே ஆகும். தற்போது ஜிஎஸ்டி முறையின் கீழ் புகையிலைப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. அதற்கு மேலான வரியை விதிக்க வசதியாக, புகையிலைப் பொருட்களை ஜிஎஸ்டி வரி அமைப்பிலிருந்து விலக்க இந்த மசோதா வழிவகுக்கிறது.
இதன்படி, சிகரெட்டுகள், சுருட்டுகள், ஹுக்கா புகையிலை, மெல்லும் புகையிலை, ஜர்தா மற்றும் வாசனைப் புகையிலை உள்ளிட்ட அனைத்து புகையிலை தயாரிப்புகளின் கலால் வரிகள் திருத்தப்பட உள்ளன. பொதுவாக வரி உயர்த்தப்படும் போது, அந்தப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக, தற்போது ரூ.18க்கு விற்பனையாகும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ரூ.10 அல்லது அதற்கு குறைவான விலையில் விற்பனையாகும் சிகரெட்டுகளின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த மசோதா இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் அது சட்டமாக்கப்படும். அதன் பின்னர் விலை உயர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 2026 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்திற்கு முன்பாக, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை உயர்வை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
