‘இனி ராணுவம்தான் பதில்!’ -சீறும் ஈரான்..! டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, தொடங்குவதற்கு முன்பே முறிவடைந்துள்ளது. இது உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடரவிருப்பதாக அமெரிக்கத் தரப்பு நம்பிக்கையுடன் கூறி வந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று ஈரான் அரசுத் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த அதிரடி நிராகரிப்புக்கு ஈரான் சில முக்கியமான காரணங்களைக் கூறியுள்ளது. அமெரிக்காவின் ‘அதிகப்படியான கோரிக்கைகள்’, நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்படுத்தி வரும் கப்பல் வழித் தட முற்றுகை, தற்போதைய பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக மாற்றியுள்ளது என்று ஈரான் சாடியுள்ளது.

குறிப்பாக, போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே, ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதும், அந்நாட்டு கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதும், ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த மிரட்டும் தொனி, அமைதியான பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் உதவாது என்றும் தெஹ்ரான் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், இந்த பேச்சுவார்த்தையில் தாங்கள் மிகவும் நேர்மையாகவும், நியாயமான முறையில் தான் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அமைதி உடன்படிக்கைக்கான வரைபடம் தயாராகிவிட்டதாகவும், ஈரான் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கடுமையான ராணுவ விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் மீது டிரம்ப் தனது மிரட்டலையும் தொடர்கிறார்.

ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் இரு வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், ஈரானின் இந்த திடீர் நிராகரிப்பு, மத்திய கிழக்கு ஆசியாவில் மீண்டும் போர் மேகங்களைச் சூழ்ந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான கதவுகள் முற்றிலும் மூடப்பட்டனவா? அல்லது கடைசி நேரத்தில் ஏதேனும் மாயம் நடக்குமா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Related News

Latest News