மத்திய ரிசர்வ் வங்கி அதாவது RBI நாட்டில் உள்ள வங்கிகளில் காசோலை மூலம் பண பரிவர்த்தனை முறையை எளிமையாகவும், விரைவாகவும் மாற்ற புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. புதிய விதிமுறையின் படி, இன்று முதல் வங்கிகளுக்கு பெற்ற காசோலைகளை அன்றைய தினமே கிளியர் செய்யும் பொறுப்பு இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பணம் உடனுக்குடன் சேர்க்கப்படும்.
புதிய முறையில், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை, வங்கிகளில் காசோலைக்கு பணம் வழங்கும் சேவைகள் செயல்படும். வங்கி காசோலை பெற்றவுடன் அதனை ஸ்கேன் செய்து கிளியரிங் மையத்துக்கு அனுப்பும். அதன் பின்னர் கிளியரிங் மையம் காசோலை படத்தை பணம் வழங்கும் வங்கிக்கு அனுப்பி, பணம் வழங்கலாமா அல்லது வழங்க முடியாதா என்பதை உறுதிப்படுத்தும்.
RBI அறிவிப்பின் படி, அன்றைய தினத்திற்குள், இரவு 7 மணிக்குள் காசோலை குறித்து வங்கிகள் முடிவெடுக்கவில்லை என்றால், அந்த காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு விரைவான பண பரிவர்த்தனையை உறுதி செய்யும் விதமாகும்.
மேலும், RBI அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்த கிளியரிங் செயல்முறைக்கான நேரக்கெடு 3 மணிநேரமாக குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கிகளின் பண பரிவர்த்தனை முறைகள் இன்னும் வேகமாக, மின்னஞ்சல் அல்லது ஆன்லைன் சேவைகள் போன்ற நேரடி முறைகளுக்கு இணையாக செயல்படும்.
இந்த புதிய நடைமுறை வங்கிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைத்து தரப்புகளுக்கும் அதிக நன்மை அளிக்கும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.