தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை ‘சிக்கன் பிரியாணி’ வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய்யின் பரிசீலனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் சகாப்தத்திலும் பள்ளி ஊட்டச்சத்துத் திட்டம் ஏதோ ஒரு வகையில் பலப்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சிக்காலத்திலும் அத்தகைய ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே அமைச்சரின் விருப்பமாக உள்ளது.
தமிழகத்தின் மதிய உணவுத் திட்ட வரலாறு என்பது உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 1950-களில் பெருந்தலைவர் காமராஜர் முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வந்த எம்ஜிஆர் அரசு அதனைச் சத்துணவுத் திட்டமாக மாற்றியது. பின்னர் கலைஞர் கருணாநிதி அந்தத் திட்டத்தில் முட்டைகளைச் சேர்த்தார், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அந்த முட்டை விநியோகத்தை வாரம் முழுவதும் விரிவுபடுத்தினார்.
முந்தைய திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில், தற்போதைய தவெக அரசு சிக்கன் பிரியாணி என்ற புதிய அம்சத்தைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
இது மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதுடன், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ராஜ்மோகன் இந்தப் பரிந்துரையை முன்வைக்கும்போது, “முன்னாள் முதல்வர்கள் ஒவ்வொருவரும் சத்துணவுத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அந்த வரிசையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சுவையான சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை மிகவும் சாதகமாகப் பரிசீலித்து வருவதாகவும், நிதி நிலை மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், தமிழகத்தின் சமூக நலத் திட்டங்களில் இது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும். மதிய உணவு மட்டுமின்றி, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திலும்’ சில அதிரடி மாற்றங்களைச் செய்யப் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தற்போது காலை உணவில் ஒரு மாணவருக்கு 15 ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், மாணவர்கள் அதிகம் விரும்பி உண்ணாத கோதுமை உப்புமா மற்றும் ரவா உப்புமா போன்ற உணவுகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அதிக ஊட்டச்சத்துள்ள மற்றும் சுவையான மாற்று உணவுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள், தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
