இந்தியாவில் நவம்பர் மாதம் முதல் பல புதிய நிதி மற்றும் அடையாள ஆவண சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள், மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
முதலில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸ் புதுப்பிப்பு இலவசமாக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் எந்த ஒரு ஆதார் சேவை மையத்திலும் இத்தகவலை புதுப்பிக்கலாம். இந்த இலவச சேவை ஒரு ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதேசமயம், பெரியவர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றை மாற்ற ரூ.75-ம் கைரேகை மற்றும் கருவிழி புதுப்பிக்க ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதேபோல், வங்கிகளில் நாமினி விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் நான்கு வாரிசுதாரர்களை நியமிக்கலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பங்குத்தொகை விகிதத்தை நிர்ணயிக்கலாம். இதனால் அவசரநேரங்களில் குடும்பங்கள் நிதியை எளிதில் பெறவும் உரிமை மோதல்கள் தவிர்க்கப்படவும் உதவும்.
மேலும், மத்திய அரசு ஊழியர்கள், தேசிய ஓய்வூதிய திட்டமான NPS-இலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமான UPS-க்கு மாறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை அதே தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; தவறினால் ஓய்வூதிய தொகை தாமதமாகும்.
அத்துடன், பஞ்சாப் நேஷனல் வங்கி விரைவில் லாக்கர் வாடகை கட்டணங்களை திருத்த உள்ளது. SBI கார்டுதாரர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் கல்வி கட்டணங்கள் அல்லது ரூ.1,000-க்கும் அதிகமான வாலெட் ரீசார்ஜ் செய்தால், 1% சேவை கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
