சிலிண்டர் வழங்கினால் 30 நாளைக்கு பிரியாணி இலவசம் – உணவகத்தில் வைக்கப்பட்ட வினோத சலுகை

வர்த்தக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், வாடிக்கையாளர்களின் சேவையும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஓசூரில் உள்ள ஒரு உணவகம் வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது.

அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதன் தாக்கமாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஓட்டல்களில் தினசரி தயாரிக்கப்படும் உணவுப் பட்டியல் குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உணவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சில ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலையும் உருவாகியுள்ளது. சிலர் மாற்று வழியாக விறகு அடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஓசூர் தளி சாலையில் செயல்படும் ஒரு உணவகம் புதுமையான அறிவிப்பை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. அந்த அறிவிப்பில், “ஒரு வர்த்தக சிலிண்டர் வழங்கினால் ஒரு மாதம் தினமும் ஒரு சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும். இரண்டு சிலிண்டர்கள் வழங்கினால், தினமும் இரண்டு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு உணவகத்திலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வாடிக்கையாளர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இதுகுறித்து உணவக உரிமையாளர் கூறியதாவது: தினமும் 500 முதல் 1,000 வரை வாடிக்கையாளர்கள் எங்கள் உணவகத்திற்கு வருகிறார்கள். இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டாலும், விரைவாக சமையல் செய்ய சிலிண்டர் அவசியமாகிறது.

மேலும், தொழிலாளர்கள் வேலை இழக்காமல் இருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு இடையூறு இல்லாமல் சேவை வழங்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 2 பேர் சிலிண்டர் வழங்கி இந்த சலுகையை பயன்படுத்தியுள்ளனர். வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை இந்த சலுகை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News