முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி மேற்கொள்ளப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் தொடங்கிய இந்த பேரணியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி-க்கள் கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்த பேரணி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்றது. அங்கு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.