கேரள மாநிலத்தின் ஆலப்புழை மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் சில பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் மற்றும் வாத்துகள் தொடர்ந்து உயிரிழந்தன. இதையடுத்து, அவற்றின் மாதிரிகள் போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், எச்-1 என்-1 (H1N1) வகை பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகள் அனைத்தையும் அழிக்கும் பணிகளை கேரள கால்நடை பராமரிப்புத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழக–கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் கால்நடைத் துறை அதிகாரிகள் முகாமிட்டு, கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
அதேபோல், கோவை, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளிலும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி மற்றும் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
