‘Follow the money!’ – ஈரானின் நிதி ஆதாரங்களை வேட்டையாடும் அமெரிக்கா!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இழுபறியாகத் தொடரும் நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு புதிய ‘டிஜிட்டல் தாக்குதலை’ தொடுத்துள்ளது. ஈரானுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சுமார் 344 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை அமெரிக்கா அதிரடியாக முடக்கியுள்ளது.

பொருளாதாரத் தடைகளை மீறி, ஈரான் சர்வதேச அளவில் பணப் பரிமாற்றம் செய்வதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்க கருவூலத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது வெறும் தற்செயலான நடவடிக்கை அல்ல; இது அமெரிக்காவின் “எகனாமிக் பியூரி” (Economic Fury) எனும் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.

பாரம்பரிய வங்கி அமைப்புகள் மூலம் ஈரானால் பணப் பரிமாற்றம் செய்ய முடியாத சூழலில், அவர்கள் கிரிப்டோகரன்சிகளைத் தங்களின் ஒரு மாற்று வழியாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஈரானிய மத்திய வங்கி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை போன்றவை, பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிக்கலான வழிகளில் சர்வதேச வர்த்தகத்தை நடத்தி வந்தன.

ஆனால், தற்போது பிளாக்செயின் அனலிட்டிக்ஸ் நிபுணர்களுடன் இணைந்து, அந்தப் பணப் பரிமாற்றங்களை அமெரிக்கா துல்லியமாகக் கண்காணித்து, ஈரானின் பணப் பரிமாற்றத் தடங்களைக் கண்டுபிடித்து, அந்த டிஜிட்டல் வாலட்களை முடக்கியுள்ளது.

ஈரானின் கிரிப்டோ சந்தை கடந்த ஆண்டு மட்டும் பல பில்லியன் டாலர்களை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஈரானின் நிதி ஆதாரத்திற்குப் பெரிய அடியாகும். “ஈரான் எங்கே பணத்தை நகர்த்தினாலும், அதை நாங்கள் பின்தொடர்வோம்” என்று அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து வரும் இந்தச் சூழலில், ராணுவ ரீதியான அழுத்தத்தை விட, பொருளாதார ரீதியான இந்த ‘டிஜிட்டல் போர்’ ஈரானை எந்தளவுக்குப் பாதிக்கும் மற்றும் ஈரான் இதற்குப் பதில் என்ன செய்யப்போகிறது என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறது.

Related News

Latest News