அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் உதவி ஆய்வாளர் பூமிவேல் தலைமையில், போலிசார் வாரணவாசி மருதையாற்று பாலத்தின் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் 5 நபர்கள் இருந்தனர், அவர்களிடம் விசாரணை செய்யும்போது, முன்னுக்கு பின்னாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலிசார் காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் 3 அரிவாள், 1 கத்தி, 2 மிளகாய் பொடி பாக்கெட்கள் இருந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து காரில் வந்த ஐந்து நபர்களிடம் விசாரணை செய்ததில், திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைமுத்து, ஹரிகரன். பிரவின். அரியலூர் மாவட்டம் உஜினி கிராமத்து சேர்ந்த
லெனின், வன்னி என தெரிய வந்தது.
இதில் லெனினின் அப்பா திருச்சி சோமரசன்பேட்டையை சேர்ந்த ஒருவரிடம், லெனினுக்கு அரசாங்க வேலை வாங்கி தருவதற்காக 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாகவும், வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அந்நபரை கடத்தி வந்து பணம் பறிக்க திட்டம் தீட்டி காரில் ஆயுதங்களுடன் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது
இதனை அடுத்து காரில் வந்த ஐந்து நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
