பருவகாலம் மாறுவதால் நீண்ட இரவுகள் வாடிக்கையாக மாறிவிட்டன. அதையடுத்து, வானியல் மாற்றங்களை நம் கண்களால் எளிதாக காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 8ஆம் தேதி, அதிகாலையில் புதன் கோளை பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு சற்று முன் தெரியும் புதன் கோளை இந்த மாதம் முழுவதும் பார்க்க முடியும்.
Draconoid Meteor Shower என அழைக்கப்படும் விண்கல் மழையை அக்டோபர் 8 மற்றும் 10ஆம் தேதிகளின் மாலை வேளைகளில் காண முடியும். காற்றுமாசு காரணமாக உலகின் சில பகுதிகளில் இவை தெளிவாக தென்படாமல் போனாலும் பல பகுதிகளில் இருந்து பார்க்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Hunter’s Moon என அழைக்கப்படும் இலையுதிர் காலத்தின் முதல் பௌர்ணமியின் போது இயல்பை விட சந்திரனின் வெளிச்சம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த முழுநிலவு தோற்றத்தை அக்டோபர் 9ஆம் தேதி பார்க்க முடியும்.
ஓரியோனிட் (Orionid) Meteor shower என அறியப்படும் இன்னொரு வகையான விண்கல் மழை அக்டோபர் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் காணப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்குள் 20 விண்கல் வரை விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமாவாசைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் தெளிவாக இருக்கும் வானத்தில், இவற்றை தெளிவாக பார்க்கலாம் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அக்டோபர் 25ஆம் தேதி ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்ரிக்காவில் பகுதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்நிகழ்வின் போது சந்திரன் ஒரு பகுதி சூரியனை மட்டும் மறைப்பதால் இவ்வாறு அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.