Thursday, December 26, 2024

திரும்ப திரும்ப தாக்கும் கொரோனா! 2 ஆண்டுகள் சொல்லிக்கொடுத்த 5 பாடங்கள்

கொரோனா என்ற பெயரை கேட்டாலே பயம், பதட்டம் என்பதையும் தாண்டி பெரும்பாலானோருக்கு சலிப்பு தட்டி விட்டது என்றே சொல்லலாம்.

உலக சுகாதார அமைப்பால் கோவிட் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு  இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டாலும், தொடர்ந்து உருமாறி வெவ்வேறு பெயர்களில் தாக்கும் கொரோனா பரவல் முடிவுக்கு வந்தபாடில்லை.

எனினும், இரண்டு வருடத்திக்கு முன்  இருந்ததை விட தற்போது மருத்துவர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை கொரோனாவுடன் வாழ பழகி கொண்டோம். கொரோனா காலம் கற்றுக்கொடுத்த, நம் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றிய அந்த ஐந்து பாடங்களை இப்பதிவில் பார்ப்போம்.

இதற்கு முன் mRNA தொழில்நுட்பத்தில் தயாரான தடுப்பூசிகள் மனிதர்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாத நிலையில், இந்த அடிப்படையில் உருவான Pfizer, Moderna நிறுவனங்களின் தடுப்பூசிகள் தொற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. முன்பின் தெரியாத வைரஸாக கொரோனா அறிமுகமானாலும், அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனிதனால் தீர்வுகளை நோக்கி பயணிக்க முடியும் என்பதை கொரோனா தடுப்பூசிகளும், சிகிச்சை முறைகளும் உணர்த்தியது.

தொற்று ஏற்பட்டவர்களிடம் இருந்து மட்டுமே கொரோனா பரவும் என முன்னதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் காற்று வழியாகவும் வைரஸ் பரவுவது உறுதியானது. இதனால், அறிவியல் கூற்றுகளுமே கூட மேம்பட்ட ஆய்வுகளில் மாற்றம் பெறும் என தெரிய வந்தது.

கணினி முன் அமர்ந்து வேலை செய்யவா இத்தனை காலம் இவ்வளவு சிரமப்பட்டு அலுவலகம் சென்றோம் என பலரையும் கேள்வி கேட்க வைத்தது Work From Home நடைமுறை. நேரில் செல்ல வேண்டிய எத்தனையோ காரியங்களை தொழில்நுட்ப பயன்பாட்டின் வழியே தவிர்க்கலாம் என டிஜிட்டல் யுகத்தின் யதார்த்தத்தை புரிய வைத்ததும் கொரோனா தான்.

என்னதான் பெருந்தொற்றாக இருந்தாலும் ஏழை, நடுத்தர மக்களை பாதித்த அளவிற்கு பணக்காரர்களை பாதிக்கவில்லை கொரோனா. தொற்று பாதிப்பு ஏற்பட்டாலுமே சிறப்பான சிகிச்சை, மேம்பட்ட சுகாதார அமைப்பு போன்ற வசதிகளோடு கொரோனாவை செல்வந்தர்கள் சமாளித்த அதே நேரத்தில் வறுமை, ஊரடங்கு, வேலையிழப்பு என பொருளாதாரம் சார்ந்த சவால்களை எதிர்கொண்ட சாமானிய மக்கள் மூலம் சமூக ஏற்றத்தாழ்வு என்னும் கொடிய நோயை அடையாளம் காட்டியது கொரோனா.

இன்னும் முடிவுக்கு வராத புதிராய் கொரோனா நீண்டு கொண்டிருந்தாலும் கூட, நிச்சயமற்ற சூழல்களிலும் வாழ்க்கை சாத்தியமே என்ற நம்பிக்கையூட்டும் பாடத்தை கடந்த இரண்டு ஆண்டுகள் கற்றுக்கொடுத்துள்ளது என சொன்னால் மிகையாகாது.

Latest news