தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அகராத்தூர் பகுதியில், ஆசைத்தம்பி என்பவர் தனியார் குளத்தை குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அந்தக் குளத்தில் இருந்து மீன்கள் திடீரென செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு டன் அளவிற்கு மீன்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மீன்களை தின்ற ஒரு கழுகும் உயிரிழந்துள்ளது. செத்து மிதந்த மீன்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டுப் பொங்கல் நாளில் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால், அன்று விற்பனை செய்ய மீன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செத்து மிதந்த அனைத்து மீன்களும் அப்புறப்படுத்தப்பட்டன. தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் குளத்தில் விஷம் கலந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், குளத்தின் தண்ணீரும் இறந்த மீன்களும் ஆய்விற்காக காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
