திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும், ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகும், தீராத வரதட்சணைக் கொடுமையால், ஒரு பெண்ணை, அவரது கணவனும், மாமனார், மாமியாரும் நடுரோட்டில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ள கொடூரச் சம்பவம், ஓசூர் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள உரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீலஜா. இவருக்கும், கர்நாடக மாநிலம், ஆனேகல் அருகேயுள்ள நாராயணபுரா கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும், 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.
திருமணம் ஆன நாள் முதலே, கடந்த 4 ஆண்டுகளாக, கணவர் அருண்குமாரும், அவரது குடும்பத்தினரும், கூடுதல் வரதட்சணை கேட்டு ஸ்ரீலஜாவைக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரைப் பார்ப்பதற்காக ஸ்ரீலஜா தனது பிறந்த வீட்டிற்குச் சென்று வந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று, மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு வந்த ஸ்ரீலஜாவுக்கு, ஒரு பயங்கரமான அதிர்ச்சி காத்திருந்தது. கணவர் வீட்டில், அவரை உள்ளே விட மறுத்து, நடுரோட்டில் நிற்க வைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
கோபம் தணியாத கணவன் அருண்குமார், மாமனார் சவுடப்பா, மாமியார் பிரபாவதி ஆகியோர் சேர்ந்து, ஸ்ரீலஜாவைத் தடியால் அடித்து, கால்களால் எட்டி உதைத்து, தலைமுடியைப் பிடித்து, தரதரவென வீதியில் இழுத்துச் சென்று, மிக மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தையும், ஸ்ரீலஜாவின் தங்கை, தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
படுகாயமடைந்த ஸ்ரீலஜா, இந்த வீடியோ ஆதாரத்துடன், ஆனேக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் என்ற பந்தத்தில் இணையும் ஒரு பெண்ணுக்கு, பாதுகாப்பும், அன்பும் கிடைக்க வேண்டிய புகுந்த வீட்டில், இப்படி ஒரு நரகம் நிகழ்த்தப்பட்டிருப்பது, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. வரதட்சணை என்ற இந்த சமூகக் கொடுமைக்கு எப்போதுதான் ஒரு முடிவு வரும்?