தமிழகத்தில் தொடரும் கனமழையால் அணைகள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின், மொத்த கொள்ளளவான 24 அடியில், தற்போது 23.29 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியை தாண்டிய நிலையில், உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்காரணமாக, அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரின் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து கன அடியாக உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 16 ஆயிரத்து 500 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 34.99 அடியை எட்டியதால், பொதுப்பணித்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் பெய்த கனமழை காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது 116 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வரும் 7 ஆயிரத்து 500 கன அடி நீர், முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக, சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படக்கூடிய மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.