மஹிந்திரா நிறுவனம் நாடு முழுவதும் மொத்தம் 250 அதிவேக மின்சார சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதில் முதல் இரண்டு ஸ்டேஷன்கள் ஏற்கனவே இந்தியாவின் இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்டுள்ளன.
நாளை (நவம்பர் 27) புதிய XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சார்ஜிங் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமெனில், சார்ஜிங் வசதிகளும் விரிவாக இருக்க வேண்டும். அதனை கருத்தில் கொண்டு, “CHARGE_IN” என்ற பெயரில் சுமார் 250 அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெங்களூருவின் ஹோஸ்கோட்டே அருகே NH75 நெடுஞ்சாலை மற்றும் டெல்லிக்கு அருகிலுள்ள முர்தூல் பகுதியில் NH44 நெடுஞ்சாலை என இரண்டு ஸ்டேஷன்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்டேஷன்களில் அதிகபட்சம் 180kW வரை அதிவேக சார்ஜர் வசதி கிடைக்கும். ஒரே நேரத்தில் நான்கு மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் மீதமுள்ள 248 புதிய ஸ்டேஷன்களையும் ஆவன செய்யத் திட்டமிட்டுள்ளது மஹிந்திரா. பயணிகள் ஓய்வு எடுக்கும் இடங்கள், உணவகங்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ள பகுதியில் இவை அமைக்கப்படும்.
இந்த அதிவேக சார்ஜர்கள் மூலம் மஹிந்திராவின் மாடர்ன் எலெக்ட்ரிக் கார்களை 20% முதல் 80% வரை வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.
சார்ஜிங் ஸ்டேஷன்களின் இருப்பிடத்தையும், கட்டணத்தையும் தெரிந்து கொள்ள மஹிந்திரா வாடிக்கையாளர்கள் “Me4U” செயலியைப் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
