வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான (OCI) குடியுரிமை விதிகளில், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மாற்றத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது கொண்டு வந்திருக்கிறது. இதுவரை காகித வடிவில் நீண்ட கால நடைமுறைகளுடன் நடைபெற்று வந்த OCI கார்டு விண்ணப்ப முறை, இனி முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ‘ociservices.gov.in’ என்ற பிரத்யேக ஆன்லைன் போர்ட்டலை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி விண்ணப்பதாரர்கள் எந்தவொரு காகித ஆவணங்களையும் நேரில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. புதிய பதிவு முதல் கார்டை ரத்து செய்வது வரை அனைத்து நடைமுறைகளும் இனி ஆன்லைனிலேயே நடைபெறும்.

இந்த புதிய விதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் நிம்மதி தரும் விஷயம், அந்த 6 மாத காத்திருப்பு காலம் நீக்கப்பட்டிருப்பதுதான். இதற்கு முன்பு, ஒருவர் OCI கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால், இந்தியாவிற்கு வந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.

ஆனால், இனி தகுதியுள்ள நபர்கள் இந்தியாவிற்கு வந்த உடனேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இந்த மாற்றம் விண்ணப்பச் செயல்முறையை வேகப்படுத்துவதுடன், தேவையற்ற நிர்வாகத் தாமதங்களையும் குறைக்கும் என்பதால், பல லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயனடைவார்கள்.

அடுத்ததாக, கட்டண முறையிலும் மத்திய அரசு தெளிவான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முன்பு ஒவ்வொரு நாட்டின் இந்தியத் தூதரகங்களிலும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன. தற்போது உலகளவில் ஒரே மாதிரியான கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து புதிய OCI விண்ணப்பங்களுக்கு 275 அமெரிக்க டாலரும், இந்தியாவிற்குள் விண்ணப்பித்தால் 15,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் மாற்றம் மற்றும் விவரங்களை மாற்ற 25 டாலரும், கார்டு தொலைந்து போனால் அல்லது சேதமடைந்தால் புதிய கார்டு பெற 100 டாலரும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே சமயம், OCI அட்டைதாரர்கள் சில கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. குறிப்பாக, புதிய பாஸ்போர்ட் வாங்கிய மூன்று மாதங்களுக்குள், அது குறித்த விவரங்களைப் புதிய புகைப்படத்துடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். அவ்வாறு செய்யத் தவறினால் 25 டாலர் அபராதம் வசூலிக்கப்படும். ஏப்ரல் 1-ஆம் தேதியே நடைமுறைக்கு வந்துவிட்ட இந்த டிஜிட்டல் மாற்றங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குச் சேவைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Related News

Latest News