யுவன் எனும் இசை தந்திரன்

432
Advertisement

1997ஆம் ஆண்டு, ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைத்த பதினாறு வயது யுவன், 1999இல் ‘பூவெல்லாம் கேட்டு பார்’ படத்தில் கவனம் ஈர்த்து,  2001இல் ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கெல்லாம், தமிழ் இசை நெஞ்சங்களை கட்டி போட தொடங்கி விட்டார்.

இதுவரை, கமல் ஹாசன் மற்றும் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இசையமைக்காமலே யுவன் அடைந்த வளர்ச்சியின் உயரம் வியப்பிற்குரியது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் ‘காதல் கொண்டேன்’, ‘கற்றது தமிழ்’ மற்றும் ‘பருத்தி வீரன்’ படங்களின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு யுவனின் இசைப் பயணத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

‘புதுப்பேட்டை’ படத்தில் இடம்பெறும் ‘ஒரு நாளில்’ பாடலில் நா.முத்துக்குமாரின் ஆழமான தத்துவத்துக்கு மெருகு சேர்க்கும் வகையில் யுவனின் இசை அமைந்ததை பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

அஜித் நடித்த ‘மங்காத்தா’ வின் வெற்றிக்கு யுவனின் BGM முக்கிய பங்கு வகித்தது மட்டுமின்றி, அதன் பின் யுவன் BGM King என பரவலாக அழைக்கப்பட்டார். யுவனுக்கு அஜித்துக்கும் முக்கிய மைல்கல்லாய் விளங்கிய ‘மங்காத்தா’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் பதினோரு ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது. 

இசைப்பயணத்தில் 25 ஆண்டுகளை கடந்து, இன்று 43ஆம் பிறந்தநாளை காணும் யுவனின் இசையின் தனித்துவத்தை குறிப்பிட்டு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.