Friday, March 14, 2025

உடல் எடையை குறைக்க ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க!

பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் காரணமான உடல் பருமனை எப்படி குறைப்பது என்ற தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு உறுதுணையாக செயல்படும் உணவாக அமைவது, Flax seeds என அழைக்கப்படும் ஆளி விதைகள்.

நார்ச்சத்து நிறைந்துள்ள ஆளி விதைகள் நீண்ட நேரத்திற்கு பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த விதைகளில் உள்ள அதிகமான புரதமும் செரிமானம் ஆக நேரம் எடுக்கும் என்பதால், இடையிடையே நொறுக்கு தீனி சாப்பிடும் எண்ணம் தவிர்க்கப்படுகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, இரத்தத்தில் உள்ள சக்கரை அளவுகளை சீராக்கி, அஜீரண கோளாறுகளை சரி செய்து நச்சுக்களை வெளியேற்றுவதால் உடல் பருமன் குறைப்பு சாத்தியமாகிறது. ஒமேகா fatty acids அதிகம் உள்ள ஆளி விதைகள் தசைகளில் ஏற்படும் உள்வீக்கத்தை தவிர்ப்பதோடு குறிப்பிட்ட புற்றுநோய் வகைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

ஆளி விதைகள் அதிகமான இரத்த அழுத்தத்தை குறைத்து மேம்பட்ட சிறுநீரக ஆரோக்கியத்திலும் பங்களிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இத்தனை நன்மைகள் கொண்ட ஆளி விதைகளை அதிக வெப்பத்துக்கு உட்படுத்தினால் ஊட்டச்சத்துக்கள் இழக்கப்பட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விதையின் அடர்த்தியான படிமங்களை செரிமானம் செய்வது கடினம் என்பதால், இந்த விதையை பொடியாக்கி பயன்படுத்துவது சிறப்பான பலன்களை தரும். சுவையில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்பதால், இந்த பொடியை பல விதமான உணவுப் பொருட்களில் கலந்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news