இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள் : வாட்ஸ்அப்பிற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

வாட்ஸ் அப் செயலியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, தனியுரிமைக் கொள்கை தொடர்பாக மெட்டா பிளாட்பார்ம்ஸ்–வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது.

தனது ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், நமது தனிப்பட்ட தரவு விற்கப்படுவதோடு மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் சுரண்டப்படுகிறது என்றார்.வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த், மெட்டா பிளாட்பார்ம்ஸ்–வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தனியுரிமை இந்த நாட்டில் தீவிரமாகப் பாதுகாக்கப்படுகிறது. எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். எந்தவொரு குடிமகனின் தனியுரிமையும் சமரசம் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், இவ்வழக்கில் வருகிற 9-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும், மெட்டா மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

Related News

Latest News