வயது வந்த பெண்களுக்கு உடல் சார்ந்த வலிகள், அதனுடன் சேர்த்து சமூகம் வரையறுக்கும் பல்வேறு கட்டமைப்புகளுக்கு எதிரான போராட்டம் என மாதவிடாய் ஒரு சவால் நிறைந்த பயணமாக அமைகிறது.
அதிலும், பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, மெனரேஜியா எனும் அதீத இரத்தப்போக்கு.
இயல்பான மாதவிடாய் இரத்த வெளியேற்றம் போல் இல்லாமல், அதிக இரத்தப்போக்கில் உறைந்த இரத்தம் கட்டி கட்டியாக வெளியேறும். இளம்வயதில் ஏற்படும் அதிக இரத்தப்போக்குக்கு PCOD போன்ற கருப்பை சார்ந்த பிரச்சினையும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு Fibroid கட்டிகளும் காரணமாக இருக்கலாம். இதை சாதாரண சிக்கல் என நினைத்து அலட்சியம் செய்தால் இரத்த சோகை ஏற்பட்டு ஹீமோகுளோபின் அளவு குறைந்து, உடல் சோர்வு உண்டாகி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழலை சந்திக்க நேரிடும்.
இரும்புசத்து மிக்க காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் வகை உணவுகள், நட்ஸ் வகைகள், புரத சத்து மிக்க மீன்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொண்டு, உடல் எடையை சீராக பராமரித்து வந்தால் PCOD பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்.
Fibroid கட்டிகளை உணவுப்பழக்கத்தினால் மட்டும் சரி செய்ய முடியாது என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பு அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வதால் அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க உடல் பருமன் கொண்ட பெண்கள் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் முறையானஉடற்பயிற்சியை பின்பற்றி உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். இளம் வயதினர் இரண்டு மாதங்களுக்கு மேல் இது போன்ற பிரச்சினை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதே போல, மெனோபாஸ் ஏற்பட்ட பிறகும் இரத்தப்போக்கு இருந்தால் அது கர்ப்பப்பை புற்றுநோயின் ஆரம்பகால கால அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடியாக தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.