‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல உயிர் வாழ முக்கிய ஆதாரமாக அமைவதும் தண்ணீர் தான்.
ஆனால், தேவைக்கு அதிகமான தண்ணீர் குடிப்பது அபாயகரமான உடல் உபாதைகளை கொண்டு வந்து உயிரையே பறிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? சராசரி மனிதருக்கு நாள் ஒன்றுக்கு இரண்டரையில் இருந்து மூன்று லிட்டர் வரை குடிநீர் தேவைப்படுகிறது.
வெயில் காலங்களிலும், உடற்பயிற்சி மற்றும் கடினமான விளையாட்டுகளில் ஈடுபடும் போது நீரிழப்பின் காரணமாக உடலில் தண்ணீரின் தேவை அதிகரிக்கிறது.
ஆனால் உடல் எடை குறைப்பு, நச்சு நீக்கம் செய்து உடலுக்கு நன்மை பயக்குவதாக நினைத்து அதிகமான தண்ணீரை பருகுவதால் ‘water intoxication’ என்ற பாதகமான சூழல் ஏற்படுவதாக ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுதிர் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆரோக்கியமான சிறுநீரகங்களால் கூட ஒரு மணி நேரத்தில் ஒரு லிட்டருக்கு மேலான தண்ணீரை சுத்திகரிப்பது சிரமம் எனவும், உடலில் சேரும் அதிகபட்ச நீரானது இரத்தத்தில் உள்ள சோடியத்தை வெகுவாக குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மூளை செல்களுக்குள் தண்ணீர் சென்று மூளை வீக்கத்துக்கு வழி வகுப்பதாகவும் சிலருக்கு வாந்தி, மயக்கம், குழப்பமான மனநிலை, எரிச்சல் போன்ற அறிகுறிகளில் முடியும் இப்பிரச்சினை, தீவிரமாகும் பட்சத்தில் கோமா, வலிப்பு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் இரத்தத்தில் உள்ள சோடியம் அளவை பரிசோதித்து உடனடியாக சரி செய்வது அவசியம் என பரிந்துரைக்கும் மருத்துவர், கவனிக்காவிட்டால் தீவிர மூளை பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
இது போன்ற சிக்கல்களை தவிர்க்க தேவையான தண்ணீரை குடிப்பதே சிறந்தது என கூறும் மருத்துவர், அதிகமான நீரை அருந்தியதால் சோடியம் குறைந்து இறந்ததாக ப்ரூஸ் லீ மரணம் குறித்து வெளியான அண்மைத் தகவலை மேற்கோள் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.