அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், உச்சக்கட்டப் பாதுகாப்புடன் ஆண்டுதோறும் நடைபெறும் வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில், திடீரெனக் கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் அதிரடி பாதுகாப்புப் படையினரால் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்
அமெரிக்காவின் மிக முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் கூடியிருந்த அந்த அரங்கில் நடந்த இந்தத் திடீர் சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிக்கப்பட்டு, ரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மின்னல் வேகத்தில் அரங்கிற்குள் நுழைந்தனர்.
“வழியை விடுங்கள்! எல்லாரும் கீழே படுங்கள்!” என்ற கூக்குரல்களுக்கு மத்தியில், சுமார் 2,600-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். பணியாளர்கள் அலறியடித்து ஓடியதால் அந்த இடமே ஒரு போர்க்களம் போலக் காட்சியளித்தது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், ட்ரம்ப் அமர்ந்திருந்த பிரதான அரங்கிற்கு வெளியே நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “வாஷிங்டனில் ஒரு பரபரப்பான இரவு. ரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் மிக விரைவாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், “நிகழ்ச்சியைத் தொடரலாம் என்று நான் பரிந்துரைத்துள்ளேன், ஆனால் சட்ட அமலாக்கத் துறையின் முடிவே இறுதியானது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பது யார், ட்ரம்ப்புக்குக் குறி வைக்கப்பட்டதா அல்லது இது ஒரு தனிப்பட்ட நபரின் செயலா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருபுறம் ஈரானுடனான போர் பதற்றம், மறுபுறம் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என அமெரிக்கா ஒரு இக்கட்டான சூழலைச் சந்தித்து வரும் வேளையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்த நாட்டின் பாதுகாப்பு அமைப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
