அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல், திமுகக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என கூறினார். அதே நேரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வுக்கு இது ஒரு அஸ்தமனத் தேர்தலாக மாறும் என்றார்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைந்தது போல் தோன்றினாலும், அது நீடிக்காது எனவும் அவர் தெரிவித்தார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறிய நாஞ்சில் சம்பத், ‘எம்ஜிஆர் காலத்தை விடவும் விஜயைச் சுற்றி அதிக மக்கள் திரள்கின்றனர். அவர் வாகை சூடுவாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது,’ என்றார்.
அதே நேரத்தில், கட்சியில் கட்டுப்பாடு மற்றும் கடமை உணர்வுள்ள வழிகாட்டிகள் தேவை எனவும், அவ்வாறு இருந்தால் கரூர் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது என்றும் அவர் வலியுறுத்தினார். வருங்காலத்தில் இதை விஜய் கவனத்தில் கொள்வார் என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும், குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் எப்போதுமே நடந்தாலும், தற்போது மீடியா வெளிச்சம் அதிகரித்திருப்பதால் அவை அதிகம் பேசப்படுகின்றன என்றார். கோவை சம்பவம் போல் நிகழ்வுகளைத் தடுப்பது அவசியம் என்றும், அதற்கான நடவடிக்கை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்வார் என நம்புவதாக கூறினார்.
பேட்டியின்போது அவர் அணிந்திருந்த ருத்திராட்ச மாலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘சமய நிகழ்வில் கலந்து கொண்டதால் அதை அணிவித்தார்கள்; அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,’ என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
