இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சம்பளதாரர்களுக்காக, இபிஎப்ஓ (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) மூலம் பிஎப் கணக்கு தொடங்கப்படுகிறது. இந்த பிஎப் கணக்கில், ஊழியர் சார்பாகவும் அவர் பணிபுரியும் நிறுவனம் சார்பாகவும் மாதந்தோறும் பங்களிப்பு செலுத்தப்படுகிறது.
தனியார் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் போது அவர்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இபிஎப் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமான ஒன்றாக, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை உள்ளது.
தற்போது இபிஎப்ஓவில் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இபிஎஸ் (ஊழியர் ஓய்வூதிய திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த குறைந்தபட்ச தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஓய்வூதிய தொகை போதுமானதாக இல்லை என்றும், அடிப்படை தேவைகளைக் கூட இதன் மூலம் நிறைவேற்ற முடியவில்லை என்றும் பல ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிஎப் கணக்கு வைத்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து பங்களிப்பு செய்த ஊழியர்கள், இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கணக்கில் செலுத்தப்படும் பங்களிப்பில் ஒரு பகுதி இந்த பென்ஷன் திட்டத்திற்காக ஒதுக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற பின்னர், இந்த தொகை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
தற்போது ரூ.1,000 ஆக உள்ள குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்த அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு தொழிலாளர் சங்கங்களும், ஓய்வூதியதாரர் கூட்டமைப்புகளும் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், அரசு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், விரைவில் ஓய்வூதியத் தொகை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது. இந்த உயர்வு நடைமுறைக்கு வந்தால், இபிஎஸ் திட்டத்தில் பங்களிப்பு செய்து வரும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5,000 கிடைக்கும்.
