இங்கிலாந்தை ஒரு அதிர்ச்சி செய்தி உலுக்கி வருகிறது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத ஒரு பெரும் சமூக மாற்றம் அங்கே நிகழ்ந்திருக்கிறது. எதுவென்றால், அங்கு டீன் ஏஜ் பெண்களின், அதாவது 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளின் கர்ப்ப விகிதம் முதன்முறையாக அதிகரித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக, படிப்படியாகக் குறைந்து வந்த ஒரு பிரச்சனை, இப்போது திடீரென மீண்டும் தலைதூக்கியிருப்பது ஏன்? இதன் பின்னணியில் இருப்பது என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
1999-ஆம் ஆண்டு, இங்கிலாந்து அரசு டீன் ஏஜ் கர்ப்பத்தைக் குறைக்க ஒரு பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் விளைவாக, கடந்த கால் நூற்றாண்டில், 18 வயதுக்குட்பட்டோர் கருத்தரிக்கும் விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்தது. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய புள்ளிவிவரங்களின்படி, 16 முதல் 17 வயதுடைய பெண்கள் மற்றும் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் என இரு பிரிவினரிடமும் கர்ப்பம் அடையும் விகிதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கோஸ்போர்ட் என்ற ஒரு நகரத்தில், 1,000 டீன் ஏஜ் பெண்களுக்கு 28 பேர் கர்ப்பம் தரிப்பதாக, மிக அதிகமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை விடக் குறைவாக இருந்தாலும், பல வருடங்களாகக் குறைந்து வந்த ஒரு பிரச்சனை, இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதுதான் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
ஏன் இந்த திடீர் மாற்றம்?
உள்ளாட்சி அமைப்புகளின் கூட்டமைப்பான LGA, இதற்கான சில முக்கிய காரணங்களை முன்வைக்கிறது.
முதலாவதாக, கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம். ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது, சரியான ஆலோசனைகள் கிடைக்காதது போன்றவை ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, பள்ளிக்கு மாணவர்கள் சரியாக வராதது.
மூன்றாவதாக,சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை மற்றும் இணையம் போன்ற டிஜிட்டால் வசதிகள் அனைவருக்கும் கிடைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
LGA-வின் சுகாதாரக் குழுத் தலைவர் டாக்டர் வெண்டி டெய்லர்(Dr Wendy Taylor), “இது வெறும் கர்ப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. இது நம் இளம் பிள்ளைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை. 25 வருடங்களாக நாம் சாதித்த வெற்றியைத் தக்கவைக்க, அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
அரசு தரப்பில், “நாங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கல்வி, ஆலோசனை மற்றும் சுகாதார சேவைகள் மூலம் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறோம். இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, உறவுகள், பாலியல் மற்றும் சுகாதாரக் கல்விக்கான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஒரு வருட அதிகரிப்பு, ஒரு தற்காலிகமான பின்னடைவா அல்லது ஒரு புதிய, அபாயகரமான போக்கின் தொடக்கமா என்ற அச்சம் நிபுணர்களிடையே எழுந்துள்ளது. ஒரு தலைமுறையையே பாதிக்கும் இந்த முக்கியமான பிரச்சனையில், இங்கிலாந்து அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
