33 வருட அமைதிக்கு முடிவு! – டிரம்ப் போட்ட அணு ஆயுத உத்தரவால் உலகிற்கு ஆபத்தா?

33 வருட கால அமைதி… ஒரே ஒரு உத்தரவால் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகையே உலுக்கியுள்ள ஒரு அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தொடங்க அமெரிக்க ராணுவத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 1992-க்குப் பிறகு, அமெரிக்கா எந்த ஒரு நேரடி அணு ஆயுத சோதனையையும் நடத்தவில்லை. இப்போது, அந்த நீண்ட கால மௌனம் கலையப் போகிறது.

“மற்ற நாடுகளின் சோதனைத் திட்டங்களுக்கு நேரடி பதிலடியாக, அணு ஆயுதங்களை சமமான அடிப்படையில் சோதிக்கத் தொடங்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். இதைச் செய்ய நான் வெறுத்தாலும், எனக்கு வேறு வழியில்லை!” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார். ரஷ்யா, தனது புதிய தலைமுறை அணுசக்தியால் இயங்கும் “Burevestnik” ஏவுகணை மற்றும் “Poseidon” நீர்மூழ்கி ஆயுதங்களைச் சோதித்த பின்னரே, டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“அமெரிக்காவிடம் தான் உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. எனது முதல் பதவிக் காலத்தில் அவற்றை முழுமையாகப் புதுப்பித்துவிட்டேன்” என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் சொல்வது வேறு. உண்மையில், ரஷ்யாவிடம்தான் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன, அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரு நாடுகளும் சேர்ந்து, உலகின் 90% அணு ஆயுதங்களை வைத்துள்ளன.

இந்தப் போட்டியில் சீனா மூன்றாவது இடத்தில் இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அவர்கள் அமெரிக்காவை நெருங்கிவிடுவார்கள் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தவே இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் மறைமுகமாகச் சொல்கிறார்.

டிரம்பின் இந்த முடிவு, சர்வதேச அளவில் ஒரு புதிய, அபாயகரமான அணு ஆயுதப் போட்டிக்கு வித்திட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒரு அமைதி ஒப்பந்தம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இது உலகப் பாதுகாப்பிற்கு வழிவகுக்குமா, அல்லது ஒரு புதிய, கணிக்க முடியாத ஆபத்தை நோக்கி உலகைத் தள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News