Wednesday, July 16, 2025

தமிழ்நாட்டில் மொழி தெரியாத பணியாளர்கள்: நடவடிக்கை எடுக்க வீரமணி வலியுறுத்தல்

மொழி தெரியாதவர்களைத் தமிழ்நாட்டில் பணியமர்த்துவதால் ஏற்படும் இந்த விபரீதத்திற்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கே.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : மொழி தெரியாத ‘கேட் கீப்பரால்’ ஏற்பட்ட விபத்து: கடலூரில் பள்ளி வாகனம்மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் பலி!

இன்று (8.7.2025) காலை 8 மணியளவில், கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று, ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில், மூன்று மாணவர்கள் பலியான கொடுமை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

வட நாட்டைச் சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா என்பவருக்கு மொழி தெரியாததால், இந்த விபத்து ஏற்பட்டது என்பது – ரயில்வே நிர்வாகத்தின் மோசமான நடைமுறைக்கு எடுத்துக்காட்டாகும்.

திடீர் விபத்தால் உயிரிழந்த மூன்று குழந்தைகளின் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சற்றும் தாமதியாமல், குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கியும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட்டிருப்பது ‘திராவிட மாடல்’ அரசின் மனிதநேய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

மொழி தெரியாதவர்களைத் தமிழ்நாட்டில் பணியமர்த்துவதால் ஏற்படும் இந்த விபரீதத்திற்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news