சென்னை, போரூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள தனியார் செல்போன் ஷோரூமில் பணிபுரிந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோயில்ராஜ் (31). இவர் பணிபுரியும் செல்போன் ஷோரூமில் பொது மேலாளராக இருக்கும் தேவநாதன் என்பவர் செல்போன்களை கடந்த மார்ச் மாதம் சரிபார்த்தபோது 85 ஐபோன்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே செல்போன் ஷோரூமில் பணிபுரிந்து வந்த கோயில்ராஜ் தலைமறைவாகியதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது கோயில்ராஜை போலீசார் பிடித்து விசாரித்ததில், கடன் தொல்லையால் 85 ஐபோன்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடிய செல்போன்களை விற்பனை செய்து பணத்தை பெற்றதாகவும் கூறினார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த திருட்டில் அவருடன் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதாக தகவல் தெரியவந்ததால் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.