தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அமமுக, சசிகலா, ஓபிஎஸ் அணியினரை அதிமுகவில் சேர்க்க மாட்டோம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பாஜக அதிமுக, தமாகா, பாமக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது. கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
தீயசக்தி திமுக வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
