பூமி ஒரு பம்பரம் போல தொடர்ந்து தனது அச்சில் சுழன்று வருகிறது. ஆனால் அந்த அச்சு எப்போதும் ஒரே நிலைமையில் இல்லாமல் சிறிய மாற்றங்களை சந்திக்கும். பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு போன்ற பெரிய மாற்றங்கள் பூமியின் சுழற்சியை பாதிக்கும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்ததே. ஆனால், அதைவிட அதிர்ச்சிகரமாக, மனிதர்களின் நீர் பயன்பாட்டினால்தான் பூமியின் சுழற்சி அச்சில் மிகப் பெரிய விலகல் ஏற்பட்டிருப்பதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
தென்கொரியாவின் சியோல் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் கி-வீயோன் சியோ தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 1993 முதல் 2010 வரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக மனிதர்கள் பூமியிலிருந்து சுமார் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீரை உறிஞ்சியுள்ளனர்.
கிணறுகள் மற்றும் குழாய்கள் வழியாக வெளியேற்றப்பட்ட இந்த நீர் கடைசியில் கடலில் கலந்துவிடுகிறது. இதன் விளைவாக கடல் மட்டம் சுமார் 0.24 அங்குலம் உயர்ந்தது. ஆனால் இதற்கு மேலாக, இந்த நடவடிக்கை பூமியின் சுழலும் அச்சை நேரடியாக மாற்றியுள்ளதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
மிகவும் அதிக அளவில் நீர் வெளியேற்றம் நடைபெற்ற பகுதிகள் – குறிப்பாக வடமேற்கு இந்தியா மற்றும் மேற்கு வட அமெரிக்கா – இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளன. நிலத்தடி நீரை பூமிக்குள் இருந்து எடுத்து, மற்றொரு இடமான கடலில் சேர்த்ததால், பூமியின் சுழற்சியில் எடை மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
நாசா வல்லுநர்களும் இந்த ஆய்வை உறுதிப்படுத்தியுள்ளனர். பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் பூமி அழியும் அளவுக்கு ஆபத்து இல்லை. ஆனால் நீண்ட காலத்தில் சுழற்சி அச்சு மேலும் மாறி, காலநிலை மாற்றங்கள், கடல் மட்ட உயர்வு போன்ற விளைவுகள் அதிகரிக்கும் என்பதே தற்போதைய உச்சபட்ச கவலை.
