Tuesday, January 13, 2026

சாலையில் சென்றவர்களை கத்தியால் வெட்டிய போதை ஆசாமிகள் கைது

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (23). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சந்துருவுக்கு பிறந்தநாள் என்பதால் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது போதையில் அட்டகாசம் செய்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தட்டி கேட்டுள்ளனர். இதனால் சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த சந்துரு கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கொண்டு தெருவில் நடந்து கொண்டு கையில் சுழற்றியபடி அந்த தெருவில் நடந்து சென்ற நபர்களை கண்மூடித்தனமாக வெட்ட ஆரம்பித்தார்.

இதில் பாரிவாக்கத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கை, தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. வெட்டுக்காயம் அடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இது குறித்து பூந்தமல்லி போலீசில் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்துரு, அரவிந்த், செல்வரசு, தினேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News