Sunday, February 15, 2026

தூக்க கலக்கத்தில் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்., செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து விபத்து..!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெரிய விபத்து ஏற்பட்டது. காரைக்குடியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அரசு விரைவு பேருந்து ஓட்டுனர் பலத்த காயமடைந்தார். மேலும், இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து காரணமாக சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அச்சரப்பாக்கம் போலீசார் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அரசு விரைவு பேருந்து ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Related News

Latest News