கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட் நகரைச் சேர்ந்த சுலிபெள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சையது இம்ரான். சில மாதங்களுக்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளி ஒருவரிடமிருந்து ஒரு ஆண் குழந்தையை சட்டவிரோதமாக, இம்ரானும் அவரது மனைவியும் தத்தெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இம்ரானின் வீட்டில் ஒரு வயது குழந்தையை நரபலி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குழந்தை பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் அதிகாரிகள் உடனடியாக இம்ரானின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு ஒரு அறையில் சிறிய குழி தோண்டப்பட்டிருந்ததும், சடங்குகளுக்காக ஊதுபத்தி, மலர்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
புதையல் கிடைக்கும் ஆசையில் குழந்தையை நரபலி கொடுக்க முயன்றதாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
