சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளிலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்படும் குழிகளால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியால், குடிநீரில் கழிவு நீர் கலந்து இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேடு பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெரியார் பாதையில்,மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது கழிவு நீருக்கான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அது மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தால் விநியோகிக்கப்படும் நீரில் கலந்துள்ளது.
மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் காரணமாகவே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக ஐயப்பன் நகர மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக ஆன்லைனில் புகார் அளித்தும் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தரப்பில், தற்போது வரை எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது.