டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், பெரும்பாலான பிஸ்கட்டுகளில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, அதிக அளவு சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றை டீயுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.
Also Read : வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவதால் இவ்ளோ ஆபத்தா?
பிஸ்கட்டுகளில் நார்ச்சத்து மற்றும் அவசியமான ஊட்டச்சத்துகள் போதுமான அளவில் இருக்காது. பசியை குறைப்பது போல் தோன்றினாலும், உடலுக்கு தேவையான சத்துகளை வழங்குவதில் அவை குறைவாகவே உள்ளன. மேலும் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் போது சிலருக்கு அசிடிட்டி, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தால் உடல் பருமன், அஜீரணம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பிஸ்கட் சாப்பிட வேண்டும் என்றால், நார்ச்சத்து அதிகம் கொண்ட முழுத் தானியங்கள் சேர்க்கப்பட்ட பிஸ்கட்டுகளை தேர்வு செய்வது நல்லது.
அதேபோல், டீயுடன் சமோசா, பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த பதார்த்தங்களை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. டீயில் உள்ள டானின் எண்ணெயுடன் கலந்து வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
Also Read : தெரியாமல் கூட இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க..!
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை டீயுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். டீயில் உள்ள ஆக்சலேட் மற்றும் டானின், இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. ஆகவே, டீ அருந்திய பிறகு சிறிது இடைவெளி விட்டு இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது உடல்நலத்திற்கு சிறந்தது.
