Friday, March 28, 2025

ரேஷன் கடைகளில் வரப்போகும் அதிரடி மாற்றம்! தமிழக அரசு சொன்ன Good நியூஸ்!

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று சட்டப்பேரவையில் 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றைய தினம் ரேஷன் கடைகள் குறித்து மீண்டும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பாக, கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடந்து வரும் நிலையில் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்தவகையில், 2 நாட்களுக்கு முன்னர், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர், ரேஷன் தொடர்பாக 2 விதமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

தமிழக உணவுத்துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, “கீழ் பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் இல்லாத காரணத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று, அங்குள்ள கடைகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, கீழ் பென்னாத்தூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள துணைக் கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வர வேண்டும்” என கேட்டுக் கொண்டதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், “நியாய விலைக்கடைகளை தொடங்குவதற்கு, அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். திமுக ஆட்சியமைந்த பிறகு இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

Latest news