பூபாலன் மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிகிறார். இவருடைய மனைவி தங்கப்பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இத்தம்பதியரின் குழந்தைகளுக்கு காதணி விழாவின்போது, இருவருக்கும் தலா 5 பவுன் நகைகள் போடுமாறு தங்கப்பிரியாவின் பெற்றோரிடம் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூபாலனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பூபாலன் மனைவியை தாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தங்கப்பிரியா தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது மனைவியை கொடுமைப்படுத்தியது குறித்து பூபாலன் தொலைபேசியில் அவரது தங்கையிடம் பேசி பகிர்ந்த ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பூபாலனின் தந்தை செந்தில்குமரன், தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கணவர் பூபாலன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகினர்.
இந்நிலையில் வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.