கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீமந்த். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்தின்போது ஸ்ரீமந்த் கேட்ட வரதட்சணையை சுஷ்மாவின் பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுஷ்மாவிடம் மேலும் ரூ.5 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் அடிக்கடி சுஷ்மாவுக்கும், அவரது கணவர் ஸ்ரீமந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் சுஷ்மா மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்த ஸ்ரீமந்த் அவரை கொலை செய்ய முயன்றார். தீயில் கருகிய சுஷ்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமந்திடம் விசாரித்து வருகிறார்கள்.