தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் சூழலில், அவை எப்போது குறையும் என மக்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றனர். இதே வேளையில் J.P. Morgan உட்பட சில சந்தை நிபுணர்கள், விரைவில் விலையில் சரிவு ஏற்படும் வாய்ப்பை சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமீபத்தில் MCX தங்கம் விலை இரண்டு நாட்களுக்குள் கிராமுக்கு ரூ.3,600 வரை உயர்ந்தது. டெல்லி, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் தங்கம் விலை ஒரே நாளில் பலமுறை மாற்றமடைந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைத்தது. அங்குள்ள அரசியல் சூழ்நிலைகள் தங்கம் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளன.
மும்பையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் J.P. Morgan தலைவர் டிமோன், தங்கம் உச்ச நிலையை எட்டிவிட்டு வீழ்ச்சி அடையக்கூடும் என எச்சரித்தார். Capital.com நிபுணர் கைல் ரோடா, ‘அமெரிக்காவில் மீண்டும் வட்டி குறைப்பு சாத்தியக்கூறுகள் அதிகரித்தால் பணவீக்கம் உயரும். அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகம் நாடுவார்கள் என்றாலும், இது குறுகிய காலத்திலேயே இருக்கும்’ என தெரிவித்தார்.
OANDA சந்தை ஆய்வாளர் கெல்வின் வோங், தொழில்நுட்ப காரணிகளால் அடுத்த சில மாதங்களில் விலையில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். அதே சமயம், ICICI Prudential நிபுணர் நரேன், வேகமான உயர்வு என்பது எதிர்கால இழப்புகளுக்கான எச்சரிக்கை என எச்சரித்துள்ளார்.
ஆனால் ANZ வங்கி, பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், புவிசார் பதற்றங்கள், பலவீனமான அமெரிக்க டாலர் ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீட்டு தேவை இன்னும் வலுவாக இருக்கும் என எதிர்மறையான கணிப்பையும் முன்வைத்துள்ளது.
மொத்தத்தில், தங்கம் குறுகிய காலத்தில் ஏற்றம் காணும், ஆனால் நீண்டகாலத்தில் விலை குறையும் வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
