மாநிலம் முழுவதும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையம் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளோடு அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது என்பது Plus Point. இந்நிலையில், தமிழ்நாட்டில் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை குழந்தைகள் மையத்தில் சேர்த்தால் குழந்தைகளுக்கு அந்த மையத்திலேயே ஆதார் அட்டையும் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, ”ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நமது மாவட்டத்தில் செயல்படும் 492 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.
மேலும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்கை பணி மேற்கொண்டு வருவதால் பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜுன் 2025-ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைப்பெற்று வருவதால், அச்சேவையையும் பயன்படுத்தி கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.