பல ஆண்கள் மற்றும் இளைஞர்கள் “ஹெல்மெட் தான் முடி உதிர்வுக்குக் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். இது உண்மையா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
முடி கொட்டும் பிரச்சினை ஏற்கனவே இல்லை என்றால், ஹெல்மெட் அணிந்தால் முடி உதிராது. ஆனால் முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சினைகள் இருந்தால், சுத்தமில்லாத ஹெல்மெட் அணிவதால் முடி அதிகம் கொட்டும்.
ஹெல்மெட்டை சரியாகப் பயன்படுத்துவதற்கான வழிகள்
ஹெல்மெட்டின் உள் பகுதி அடிக்கடி சுத்தமாக இருக்க வேண்டும்; உள்ள ஸ்பாஞ்சை நன்கு கழுவுங்கள். தலைக்கு சரியான அளவிலான ஹெல்மெட் அணியவும்; அதிகமாக இறுக்கமோ தளர்வோ இருக்கக்கூடாது.
ஹெல்மெட் போடும் முன் ஒரு சுத்தமான காட்டன் துணியை தலைக்கு கட்டினால் வியர்வை நேரடியாகத் தலைமுடிக்கு சேராது. ஈரமான தலைமுடியில் ஹெல்மெட் அணிய வேண்டாம்; முடியை நன்கு உலர்த்திக் கொண்டு அணிய வேண்டும்.
உங்களுடைய சொந்த ஹெல்மெட்டை மட்டும் பயன்படுத்துங்கள். மற்றவரின் ஹெல்மெட்டை அணிந்தால் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
முடி உதிர்வை குறைக்கும் வாழ்க்கை முறைகள்
தலைமுடியை வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை நன்றாக ஷாம்பூ செய்து சுத்தமாக வைத்திருங்கள்.
முடிக்குத் தேவையான புரதம், இரும்பு, வைட்டமின் பி-காம்ப்ளெக்ஸ், சிங்க், ஓமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
மருத்துவரின் ஆலோசனையுடன் முடிக்கான சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்ளலாம். முடி வேர்களில் பொடுகு மற்றும் எண்ணெய் அதிகமாக தேங்காமல் கவனம் செலுத்துங்கள்.
இந்த முறைகளை பின்பற்றுவதால் ஹெல்மெட் அணியும் போது முடி உதிர்வு குறையும் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கும்.