ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் விபத்தில் காயமடைந்த மணீஷ் என்ற நபர் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. அவருக்கு உதவியாக மணீஷின் தந்தை ஜெகதீஷ் வந்துள்ளார்.
ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜெகதீஸால் சரியாக பேச முடியாத நிலையில், அருகிலிருந்த மற்றொரு அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்து ஜெகதீஸ் என்று அழைத்துள்ளனர். உடனடியாக அந்த அரங்குக்கு ஜெகதீஸ் சென்ற நிலையில், அவர் கையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான பணிகளை மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த மருத்துவர் இவர் நோயாளி அல்ல எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அறுவைச் சிகிச்சை நிறுத்தப்பட்டு ஜெகதீஸின் கையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளது.
நோயாளி யார் என்றுகூட உறுதி செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்ய முயற்சித்த மருத்துவப் பணியாளர்களால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.