Sunday, August 31, 2025
HTML tutorial

வடமாநில வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவர்கள்

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஹரதன் பவுரி (35). என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கி கட்டுமான தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 22 ஆம் தேதி சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வாங்குவதற்காக சென்றபோது அவரது இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது.

இதில் படுகாயம் அடைந்த ஹரதன் பவுரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் ஹரதன் பவுரியின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு எக்ஸ்ரே மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், இங்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது, அதனால் அவரது சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் சொன்னதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஹரதன் பவுரியிடம் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இருந்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஹரதன் பவுரி மருத்துவமனை முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் 6-நாட்களை கடந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்ய எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யாமல் அவரை டிஸ்சார்ஜ் செய்து வெளியே அனுப்பி உள்ளனர்‌.

தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஹரதன் பவுரி காலில் கட்டுடன் நடக்க முடியாமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரயில் ஏறி சொந்த ஊருக்கு சென்று காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்க்காக புறப்பட்டு சென்றார். செங்கல்பட்டு அரசு மருத்துவர்களின் மனிதாபிமானமற்ற செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News