உத்தரபிரதேச மாநிலம் , மீரட்டில் உள்ள ஜக்ரிதி விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சர்தார் ஜஸ்பிந்தர் சிங். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவரது 2 வயது குழந்தை வீட்டில் விளையாடியபோது மேஜையின் மீது விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு கண்ணீன் மேல் பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது 2 வயது குழந்தை மன்ராஜை அழைத்துக் கொண்டு சிகிச்சைகாக பாக்யஸ்ரீ மருத்துவமனை என்னும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவர் ஒருவர் குழந்தையின் காயத்திற்கு சிகிச்சை அளித்து கட்டுப்போட்டு அனுப்பியுள்ளார். ஆனால் இரவு முழுவதும் சிறுவன் மன்ராஜ் வலியில் துடித்துள்ளான். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையின் நெற்றியில் போடப்பட்டு இருந்த கட்டை அவிழ்த்து பார்த்த போது சிறுவனின் காயத்தில் தையல் போடுவதற்குப் பதிலாக ஃபெவிக்விக் தடவப்பட்டி இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஃபெவிக்விக் மருந்தை அகற்றிய பிறகு, காயத்தின் மீது மருத்துவர்கள் உடனடியாக நான்கு தையல்களைப் போட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மீரட் அரசு தலைமை மருத்துவர் அசோக் கட்டாரியா கூறுகையில் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, “குழந்தையின் குடும்பத்தினரிடமிருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சி மற்றும் கவலைக்குரிய விஷயம். முழு சம்பவத்தையும் விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
