பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியான டேஸ்ட்அட்லஸ் (TasteAtlas) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறந்த உணவுகள் குறித்த பட்டியல்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில், உலகின் சிறந்த 20 சிக்கன் உணவுகளில் பட்டியலில் இந்தியாவின் பட்டர் சிக்கனுக்கு 5-வது இடம் பிடித்துள்ளது. பட்டர் சிக்கன் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டர் சிக்கன் மட்டுமின்றி இந்த லிஸ்டில் இன்னொரு இந்திய உணவுக்கும் இடம் கிடைத்துள்ளது.
அதாவது, பட்டியலில் தந்தூரி சிக்கன் 14வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே மிகவும் பழமையான சிக்கன் உணவுகளில் ஒன்றாக தந்தூரி சிக்கன் சொல்லப்படுகிறது.

அதாவது, சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தே இந்த உணவுக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனினும், இன்று நாம் சாப்பிடும் வகையில் தந்தூரி சிக்கன் 1940களின் பிற்பகுதியில் டெல்லியில் சமைக்கப்பட்டது. இந்த இரு உணவுகளும் தான் இப்போது டேஸ்ட் அட்லஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும், ‘உலகின் 20 சிறந்த சிக்கன் உணவுகள்’ என்ற தலைப்பிலான பட்டியலில் துருக்கியின் பிலிக் டோப்காபி முதலிடத்திலும், மொராக்கோவைச் சேர்ந்த ரிஃபிசா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த சிக்கின் மற்றும் கொரிய வறுத்த சிக்கன் ஆகியவை 2-வது இடத்திலும் உள்ளன.
டாப் உணவுகள் பட்டியலில் சிக்கன் பிரியாணி இடம் பெறாதது வருத்தம் என்று சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்தியாவில் பலரது விருப்ப உணவாக சிக்கன் பிரியாணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
