Monday, December 22, 2025

ஒரு ஏடிஎம்மில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் நிரப்ப முடியும்ன்னு தெரியுமா?

ATM இன்று அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பலர் பணத்தை எடுக்கவும், செலுத்தவும் ஏடிஎம்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக வங்கிக்குச் சென்று வருவது மக்களிடையே குறைந்துள்ளது. வங்கிச் சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதில் ஏடிஎம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ஏடிஎம் தொழில்நுட்பத்தின் பின்னணியில் பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஒரு ஏடிஎம்மில் எவ்வளவு பணம் நிரப்பப்படும் என்பதுதான். இது பற்றி பலருக்கும் தெளிவாக தெரியாது.

நாம் தினசரி தேவைக்காக ஏடிஎம்களுக்கு செல்லும் போது, சில நேரங்களில் “ATM-ல் பணம் இல்லை” என்ற அறிவிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்போம். அப்போது, ஒரு ஏடிஎம்மில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் இருக்கும் என்ற கேள்வி நிச்சயம் தோன்றும்.

உண்மையில், ஒவ்வொரு ஏடிஎம் இயந்திரத்திற்குள்ளும் “கேஷ் கேசட்” (Cash Cassette) எனப்படும் சிறப்பு பணப்பெட்டிகள் உள்ளன. அந்த பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு நோட்டுகளை மட்டுமே வைக்க முடியும். பொதுவாக, ஒரு ஏடிஎம்மில் ஒரே நேரத்தில் சுமார் 8,000 முதல் 10,000 வரை நோட்டுகள் நிரப்பப்படுகின்றன.

இந்த நோட்டுகள் அனைத்தும் ரூ.500 மதிப்பிலானவை என்றால், ஒரு ஏடிஎம்மில் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை பணம் நிரப்ப முடியும். ஆனால் நடைமுறையில் இது அரிதாகவே நடைபெறும்.

ஏனெனில், பெரும்பாலான ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகளுடன் சேர்த்து ரூ.100, ரூ.200 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகளும் வைக்கப்படுகின்றன. இதனால், மொத்தமாக ஏடிஎம்மில் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது.

ஒரு ஏடிஎம்மில் எவ்வளவு பணம் நிரப்ப வேண்டும் என்பதை அந்தந்த வங்கிகள் தீர்மானிக்கின்றன. ஏடிஎம் அமைந்துள்ள இடம், அங்கு பணம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளை வைத்து இந்த அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், சில ஏடிஎம்களில் குறைந்த அளவு பணமும், சில ஏடிஎம்களில் அதிக அளவு பணமும் இருக்கும்.

பொதுவாக சராசரியாக பார்த்தால், ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

Latest News