இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டுகள் அவசிய தேவையாக மாறிவிட்டது. கிரெடிட் கார்டுகள் வெறும் பணம் செலுத்தும் வசதி மட்டுமல்ல. அவை ஒரு முக்கியமான நிதி மேலாண்மை கருவியாகவும் மாறிவிட்டன. ஆன்லைன் ஷாப்பிங், அவசர செலவுகள், பயணம் போன்ற பல தேவைகளில் உதவுகின்றன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது இயல்பானதாகி உள்ளது. ஆனால் நன்மைகள் இருப்பதைப் போலவே, சில அபாயங்களும் உள்ளன.
பல கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு கார்டுக்கும் தனித்தனி கட்டண தேதி இருக்கும். அவற்றை நினைவில் வைத்திருப்பது சிரமமாக இருக்கலாம். ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் விதிக்கப்படும். அதைவிட முக்கியமாக, சிபில் ஸ்கோருக்கு பாதிப்பு ஏற்படும். ஒரே ஒரு கார்டின் தேதியை மறப்பதே பலருக்கு நடக்கும்போது, பல கார்டுகளின் தேதிகளை கண்காணிப்பது சவாலாக இருக்கும்.
சிலர் முழுத் தொகையை செலுத்த முடியாத சூழலில் குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்துகின்றனர். ஆனால் இது நீண்டகாலத்தில் அதிக வட்டி சுமையை ஏற்படுத்தி, கடன் சுழலில் சிக்க வைக்கும். பல கார்டுகள் வைத்திருப்பவர்கள் இந்த தவறை அடிக்கடி செய்கிறார்கள்.
இதைத் தவிர்க்க வங்கிக் கணக்கிலிருந்து தானாக பணம் கழிக்கும் ஆட்டோ-பேமெண்ட் வசதியை பயன்படுத்தலாம். ஆனால் அதற்கான போதுமான தொகை கணக்கில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கிரெடிட் பயன்பாட்டு விகிதம் முக்கியம். உங்களிடம் பல கார்டுகள் இருந்தாலும், மொத்தமாக வழங்கப்பட்ட வரம்பின் 30 சதவீதத்தைத் தாண்டி பயன்படுத்தினால், வங்கிகள் அதை அதிக கடன் சார்ந்த பழக்கமாகக் கருதலாம். இது சிபில் ஸ்கோரைக் குறைக்கக்கூடும்.
ஆண்டு கட்டணமும் கவனிக்க வேண்டிய அம்சமாகும். சில கார்டுகள் முதல் ஆண்டில் கட்டணமின்றி வழங்கப்படலாம். ஆனால் பின்னர் ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படும். பல கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டிய சூழலில், அது உங்கள் சேமிப்பில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கிரெடிட் கார்டுகளை சீராக கையாள சில வழிகள் உள்ளன. முதலில், கட்டணங்களை தவறாமல் செலுத்த ஆட்டோ-பேமெண்ட் வசதியை பயன்படுத்தலாம். இரண்டாவது, ஒவ்வொரு கார்டையும் குறிப்பிட்ட செலவுக்காகப் பிரித்து பயன்படுத்தலாம்.
உதாரணமாக, மளிகை செலவுக்கு ஒரு கார்டு, எரிபொருள் செலவுக்கு மற்றொரு கார்டு என திட்டமிடலாம். மேலும், தேவையில்லாமல் அதிக கார்டுகளை வாங்காமல், உண்மையில் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்ல நிதி ஒழுங்கை பேண உதவும்.
