ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா? – உடனே இந்த ஒரு வேலையைச் செய்யுங்க!

பெரும்பாலான மக்கள் தங்கள் வங்கி கணக்கின் ரகசிய பின் நம்பர் அல்லது ஓடிபி-யை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், தங்களது பணம் பாதுகாப்பாக இருப்பதாகவே இன்றும் நம்புகிறார்கள். ஆனால், இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் உங்கள் வங்கி ரகசியங்களைச் சொல்லாமலேயே உங்கள் கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் திருட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்ற முறை அல்லது ஏ.இ.பி.எஸ் (AePS) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் இப்போது பொதுமக்களின் பணத்தைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏடிஎம் கார்டு, ஸ்மார்ட்போன் அல்லது இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லாதவர்களும் எளிதாகப் பணம் எடுக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், இப்போது மோசடிப் பேர்வழிகளுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக மாறிவிட்டது. இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பதுதான் இதில் மிக முக்கியமான விஷயம். நாம் சொத்துப் பதிவு செய்யும்போதோ அல்லது அரசு அலுவலகங்களில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்போதோ பதிவாகும் நமது கைரேகைகளைச் சைபர் திருடர்கள் ரகசியமாகத் திருடுகிறார்கள்.

நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தத் திருடப்பட்ட கைரேகைகளைச் சிலிகான் போன்ற பொருட்கள் மூலம் போலி முத்திரைகளாக உருவாக்குகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்ட நபரின் ஆதார் எண்ணையும், இந்தத் திருடப்பட்ட போலி கைரேகையையும் மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களில் பயன்படுத்தி, மிக எளிதாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிடுகிறார்கள்.

இந்தத் திருட்டு மிகத் தந்திரமானது, ஏனெனில் உங்கள் மொபைலுக்கு எந்த ஒரு ஓடிபி அல்லது உறுதிப்படுத்தல் செய்தியும் வராது. உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட பிறகே உங்களுக்குத் தெரியவரும். இந்த மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பல வழிகள் இருந்தாலும், மிக முக்கியமான ஒன்று ‘பயோமெட்ரிக் லாக்கிங்’ (Biometric Locking). யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI) இணையதளம் அல்லது ‘எம்-ஆதார்’ (mAadhaar) செயலியைப் பயன்படுத்தி உங்கள் கைரேகைகளை நீங்கள் லாக் செய்து கொள்ளலாம்.

அப்படிச் செய்துவிட்டால், நீங்கள் மீண்டும் அதனை அன்லாக் செய்யும் வரை உங்களைத் தவிர வேறு யாராலும், உங்கள் கைரேகையைப் பயன்படுத்திப் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. தேவைப்படும்போது மட்டும் சில நிமிடங்களுக்கு அன்லாக் செய்துவிட்டு, வேலை முடிந்ததும் மீண்டும் லாக் செய்துகொள்வது உங்கள் பணத்திற்கு ஒரு மிகப்பெரிய கவசமாக இருக்கும்.

அதேபோல், தேவையற்ற இடங்களுக்கு உங்கள் ஆதார் கார்டு நகல்களைக் கொடுப்பதைத் தவிருங்கள். அப்படியே கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அந்த நகலில் உங்கள் கையெழுத்திட்டு, எந்தத் தேவைக்காக அந்த நகல் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.

முடிந்தவரை உங்கள் முழு ஆதார் எண்ணையும் தராமல், இறுதி நான்கு இலக்கங்கள் மட்டும் தெரியும்படி இருக்கும் ‘மாஸ்க் செய்யப்பட்ட ஆதார்’ (Masked Aadhaar) நகலையோ அல்லது விஐடி (Virtual ID) எனப்படும் 16 இலக்கத் தற்காலிக எண்ணையோ பயன்படுத்துவது பாதுகாப்பானது. உங்கள் வங்கி பரிமாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பதும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாகச் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிப்பதும் உங்களைக் காக்கும். விழிப்புணர்வே உங்கள் பணத்திற்கான மிகப்பெரிய பாதுகாப்பு.

Related News

Latest News